என்னை திட்டமிட்டு தப்பானவர் என்று சொல்கின்றார்கள்; கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியது வரும் - சசிகலா புஷ்பா ஆவேசம்
பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தப்பாக சித்தரித்து போடுகிறார்கள். ஏன் பெண்கள் அரசியலுக்கு வரவே கூடாதா? எனக்கு பின்னாலும் என்னை பின்பற்றி பல பெண்கள் அரசியலுக்கு வருவார்கள் என்கிறார் பாஜக தமிழ் மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாஜக கட்சி அலுவலகத்தில் இவர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது நாடாளுமன்ற எம்பிக்களுக்கு வீடு அளித்தது குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வைரலாகிக் கொண்டிருப்பது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற எம்பியாக இருந்தவர்களுடைய பதவி காலம் முடிந்த பிறகும், எம்பிக்களுக்கு கோட்டா ஒன்று இருக்கிறது.
அந்த அடிப்படையில் ஒவ்வொரு முன்னாள் எம்பிகளுக்கும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை புதுப்பித்து அந்த வீட்டில் இருக்கக்கூடிய வாய்ப்பை மத்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது. நான் மட்டுமல்ல அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்பிக்களும் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு காரணம் இருந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த அடிப்படையில் தான் அதற்கு சரியான காரணம் எனக்கு வந்தது என்கின்ற அடிப்படையில் மூன்று மதத்திற்கு ஒரு முறை அந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. தூத்துக்குடியில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதால் இங்கு அதிகமான வேலைகள் இருந்ததால் நான் இப்போது டெல்லிக்கு அடிக்கடி செல்லவில்லை . இந்த வீடு அரசுக்கு சொந்தமானது. ஆனால் வேண்டுமென்றே என்னை ஒரு பெண் என்பதால் அடிக்க வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் .
பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தப்பாக சித்தரித்து போடுகிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வரவே கூடாதா என்று ஆவேசப்பட்டவர், எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நாங்களும் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்றார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் தூத்துக்குடியில் பாஜக வெற்றி பெறப்போவது உறுதி. இதனால் தான் தூத்துக்குடியில் இருக்கும் என்னை திட்டமிட்டு ஒரு பெண்ணை தப்பானவர் என்று சொல்கின்றார்கள். பெண்களை கேவலப்படுத்தினால் அவர்கள் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில் இப்படி செய்யாதீர்கள். எனக்கு பின்னாலும் என்னை பின்பற்றி பல பெண்கள் அரசியலுக்கு வருவார்கள்.
திமுக ஐடி விங்தான் இது மாதிரியான நிறைய தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். முன்னாள் எம்பியை ஒரு பெண்ணை உல்லாச விடுதி நடத்தினார் என்று சொல்லியது கேவலமான பேச்சு. ஒவ்வொரு முறையும் தவறான வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தவறான போட்டோக்களை சித்தரித்து போடுகிறார்கள். இனிமேல் இப்படி செய்தால் வழக்கு பாயும். கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடும் நீங்கள் கொடுக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.