‘’செய்த தவறை உணர்ந்தது வரவேற்கத்தக்கது! இனி இது போன்ற தவறான செயல்களை தவிர்ப்பது திமுகவுக்கும் நல்லது!’’

 
m

இனி இது போன்ற தவறான செயல்களை தவிர்ப்பது மாநில அரசுக்கும், திமுகவுக்கும் நல்லது என்று தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

மகரிஷி சரக் சபத் உறுதி மொழி விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

tt

 மதுரை மருத்துவக் கல்லூரியில் மகரிஷி என்கிற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதை அடுத்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  மேலும் ,  ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இதேபோன்று நடைபெற்று இருப்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.

 இதற்கு விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,    தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் சுற்றறிக்கை பரவிய நிலையில் அதுதொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மூலமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.

 அந்த சுற்றறிக்கையில்,  சரக் சபத் உறுதிமொழி எதுவும் எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.  ஆனாலும் மதுரை மருத்துவக் கல்லூரியில் சரக் சபத் உறுதிமொழி ஏற்கப்பட்டது என்கிற தகவல் தெரிந்தவுடன் முதல்வரின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநர் விசாரணை நடத்தியது.   அடுத்து கல்லூரி முதல்வர் மாற்றப்பட்டார் என்பதை மா. சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார் .

ur

அதேநேரம்,  மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்றும்,  நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து விட்டார் என்றும் சொன்ன மா. சுப்பிரமணியன்,   முதலமைச்சரின் உத்தரவுப்படி மீண்டும் அவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் பணியமர்த்தப்படுவார் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,   ‘’காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கி எறியப்பட்ட மதுரை மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவர் ரத்தினவேல் அவர்களை, நம் கடும் எதிர்ப்புக்கு பின் செய்த தவறை உணர்ந்து மீண்டும் அதே பணியில் தமிழக அரசு நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது’’ என்று தெரிவித்திருக்கிறார்.   அவர் மேலும்,  ‘’இனி இது போன்ற தவறான செயல்களை தவிர்ப்பது மாநில அரசுக்கும், திமுகவுக்கும் நல்லது’’ என்று தெரிவித்திருக்கிறார்.