அந்த செய்தி மனதை உலுக்குகிறது; திமுகவின் போலி சமூக நீதி நாடகம் - தோலுரித்துக்காட்டும் அண்ணாமலை

 
sa

திறனற்ற திமுகவின் போலி சமூக நீதி நாடகம் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.  விளம்பரங்களால் திறனற்ற திமுக ஆட்சியின் அவலங்களை வெகு நாட்களுக்கு மறைக்க முடியாது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும் என்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  

 அவர் மேலும் இந்த பிரச்சனை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,   ‘’மாநிலம் முழுவதும் உள்ள சமூகத்தில் பின்தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களின் நூற்றுக்கணக்கானோர் ஒவ்வொரு வருடமும் எப்படியாவது சமுதாயத்தில் முன்னேறி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பட்டப்படிப்பிற்காகவும் பட்ட மேற்படிப்பிற்காகவும் தலைநகர் சென்னைக்கு வருகிறார்கள்.  தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில் அந்த மாணவர்கள் அடிப்படை வசதிகளுக்கு போராட வேண்டிய அவல நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது’’என்கிறார்.

ann

தொடர்ந்து அவர் தனது அறிக்கையில்,  ‘’மாணவர்கள் விடுதி கூரை மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும், சரியான குடிநீர் கிடைக்காமல் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நிறைவதாகவும் விடுதி மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கடந்த மழைக் காலத்தில் மழை நீர் விடுதியில் உள்ளே புகுந்ததால் மாணவர்கள் தூங்குவதற்கு இடமில்லாமல் நோய் தொற்றுகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.  மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையால் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டில், போர்வை, தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள் மாணவர்கள்.  இது மட்டும் அல்லாது மாணவர்களுக்கு மாதா மாதம் இதர செலவாக வழங்கப்பட வேண்டிய 150 ரூபாயும் வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ass

’’மாணவர் விடுதிகள் இத்தனை அலங்கோலமான நிலையில் இருக்க அரசால் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆனால் அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என தெரிய வந்துள்ளது.  சென்ற ஆண்டு ஆதி திராவிட நலனுக்காக 4099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி,  ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்துள்ளார்.  சென்ற ஆண்டு ஆவி திராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் 257 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.  ஆனால் ஆதி திராவிட விடுதிக்கு செலவீடாதது ஏன் என்ற கேள்விக்கு திறனற்ற திமுக பதிலளிக்க வேண்டும்’’என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

 ’’கல்வி, வீட்டு வசதி திட்டங்கள்,  வேலை வாய்ப்பு, நூலகங்கள், மாணவர் விடுதிகள் போன்ற அடிப்படை தேவைகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்க அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுவதுமாக பயன்படுத்தாமல் இருப்பது திறனற்ற திமுக அரசின் மெத்தனத்தையும் சமுதாயத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள் மீதான கடும் அலட்சியப் போக்கையும் காட்டுகிறது.  ஆனால் அரசியல் மேடைகளில் சமூகநீதி நாடகம் அரங்கேற்றுவது திமுகவின் போலி வேசத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக மீண்டும் அத்துறைக்கு வழங்கி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளையும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, நூலகம் உள்ளிட்ட இதர நலப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தமிழக பாஜக சார்பாக வற்புறுத்துகிறோம்’’என்று தெரிவித்திருக்கிறார்.