சிங்கங்கள் எங்கள் பக்கம் வந்துவிட்டார்கள்; அங்கே இருப்பது அசிங்கங்கள் -டிடிவி தினகரன்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் இபிஎஸ் -ஓபிஎஸ் இடையே மோதல் உச்சத்திற்கு வந்திருக்கிறது. ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னால் சசிகலாவும் டிடிவி தினகரன் இருக்கிறார்கள். அதனால் தான் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கிறோம் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.
இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது .
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, வினை விதைத்தவன் வினை அறுப்பான். அதிமுகவில் தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தினை விதைத்தவர்கள். அவர்கள் வினை விதைத்தவர்கள். பொதுக்குழு என்கிற பெயரில் நடந்த கூத்தை பார்த்திருப்பீர்கள். அதிமுகவில் இருப்பது அசிங்கங்கள். அதிலிருந்து சிங்கங்கள் எல்லாம் உங்கள் பக்கம் உள்ளார்கள். நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம் என்றார்.
தொடர்ந்து பேசிய தினகரன், தர்மயுத்தம் தொடங்கிய போது ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். அதன் பின்னர் அவரை சந்திக்கவில்லை. ஆனாலும் ஓபிஎஸ் எனது நண்பர் என்று சொன்னவர், பதவி கொடுத்த பின்னர்தான் எடப்பாடியின் குணம் தெரிந்தது. நேர்மையாக செயல்படுவது தான் ராஜதந்திரம். ஆனால் இங்கு ஐபிஎல் ஏலம் நடந்து கொண்டிருக்கிறது. அது அருவருப்பாக இருக்கிறது. உறுப்பினர்கள் தொண்டர்கள் வாக்களித்தால் யார் தலைவர் என்று தெரியும். இன்னும் அதிமுகவில் என் ஸ்லீப்பர் செல்கிறார்கள். ஆனால் நரி கூட்டத்தில் மோத விருப்பமில்லை. நாங்கள் எங்கள் சின்னத்திலேயே போட்டியிடப் போகிறோம் என்றார்.