பறந்தது பச்சைக்கொடி! ராமநாதபுரத்தில் களமிறங்கும் மோடி!

 
oo

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கி போட்டியிட பிரதமர் மோடி முடிவெடுத்து இருப்பதாகவும் இதற்காக கள ஆய்வு செய்த பாஜக குழு பச்சை கொடி காட்டி இருப்பதாகவும் தகவல்.

 குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமர் வேட்பாளரானதும் 2014 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி, வதோதரா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு வதோதரா தொகுதியை விடுவித்தார்.  இதன் பின்னர் 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்றார்.  தற்போது மூன்றாவது முறையாக மோடி சந்திக்கும் மக்களவைத் தேர்தல் அவருக்கு பெரும் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது. 

mmo

 இந்த முறை இரண்டு தொகுதியில் போட்டியிடலாம் என்று பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளாராம்.   ஒன்று வழக்கம் போல் வாரணாசி இன்னொன்று தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதி என்கிறார்கள்.   காசி என்றாலே அடுத்தபடியாக எல்லோரும் சொல்வது ராமேஸ்வரம் தான்.  அப்படிப்பட்ட ஆன்மீக தலமான ராமேஸ்வரம் இருப்பதால் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட மோடி முடிவு எடுத்திருக்கிறார். 

 கர்நாடகத்தில் மட்டுமே பாஜக இருக்கும் நிலையில் அதற்கடுத்தபடியாக தமிழகத்தை பிடித்து விடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் போட்டியிட்டால் தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று பாஜக தலைமை நினைக்கிறதாம்.  2019 மக்களவைத் தேர்தலின் போதே  மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.   கடைசி வரைக்கும் அந்த முடிவு ஆலோசனை நடந்திருக்கிறது.  பின்னர் தான் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற நயினார் நாகேந்திரனுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் நிற்பதற்காக பாஜக குழு  தொகுதியில் ஆய்வு நடத்தியிருக்கிறது.  அதன் பின்னர் சாதக பாதகங்களை எல்லாம் அறிந்து  பிரதமர் மோடிக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிறதாம்.   இதனால் வாரணாசி அடுத்து ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிடப் போவது உறுதி என்று பாஜக வட்டாரத்தில் தகவல் பரவுகிறது.