கவர்னருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜி பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமனம்.. மேற்கு வங்க அரசு அறிவிப்பு

 
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க கவர்னருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து அரசு பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமிக்கப்படுவார் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசின் நிர்வாகத்தை மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார். மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் அண்மையில், கவர்னர் மாளிகை அனுமதியின்றி மாநில அரசு பல துணைவேந்தர்களை நியமித்துள்ளதாக கவர்னர் ஜகதீப் தங்கர் குற்றம் சாட்டியிருந்தார்.

மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக கல்வி கட்டுப்படுத்தப்படுகிறது… மம்தா அரசு மீது கவர்னர் ஜகதீப் குற்றச்சாட்டு

இந்நிலையில் நேற்று மேற்கு வங்க கவர்னருக்கு பதிலாக முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து அரசு பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமிக்கப்படுவார் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மேற்கு வங்க அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு (அரசு பல்கலைக்கழங்களின் வேந்தராக முதல்வர் நியமனம்) எடுக்கப்பட்டுள்ளது.

பிரத்யா பாசு

இதன்படி, மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு,  அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கை அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.