குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரிக்க முடியாது.. ஷாக் கொடுத்த மம்தா பானர்ஜி

 
மம்தா பானர்ஜி

எங்களிடம் ஆலோசனை செய்யாமல் அறிவித்ததால் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க மாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய இந்திய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட்  6ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தங்கர் போட்டியிடுகிறார். அதேவேளையில் எதிர்கட்சிகளின்  பொது  வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

மார்கரெட் ஆல்வா 

இந்நிலையில், எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டதால், நாங்கள் அவரை ஆதரிக்க மாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் திடீரென அறிவித்துள்ளது. மார்கரெட் ஆல்வாவுடன் மம்தா பானர்ஜிக்கு தனிப்பட்ட உறவு நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஆல்வாவின் பெயரை அறிவிப்பதற்கு முன்பு காங்கிரஸூம், தேசியவாத காங்கிரஸூம் தன்னிடம் தெரிவிக்காததால் மம்தா வருத்தமடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க திரிணாமுல் காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளது.

அபிஷேக் பானர்ஜி

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸை கவனத்தில் கொள்ளாமல் எதிர்க்கட்சி வேட்பாளரை அறிவிக்கும் நடவடிக்கையில் எங்களுக்கு உடன்பாடி இல்லை. எங்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை அல்லது எங்களுடன் எதுவும் விவாதிக்கப்படவில்லை. எனவே எதிர்க்கட்சி வேட்பாளரை நாங்கள் ஆதரிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸின் இந்த முடிவால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தங்கருக்கு சாதகமாக அமைந்துள்ளது.