மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்கிறார்கள், அவர் எங்கள் பேச்சை கேட்பதில்லை.. அசோக் கெலாட் குற்றச்சாட்டு

 
அசோக் கெலாட்

மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்கிறார்கள், அதனால்தான் மக்கள் அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 18வது அகில இந்திய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது: மாநில அரசுகள் கவிழ்கின்றன-கோவா, மணிப்பூர், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா?. 

மோடி

எனது அரசாங்கம் எப்படி காப்பாற்றப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. நான் இன்று உங்கள் முன் நின்று இருக்க மாட்டேன். இன்று வேறு முதல்வரை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். நாட்டில் பதற்றம் மற்றும் வன்முறை சூழல் நிலவி வருகிறது. ஜனநாயகம் சகிப்புத்தன்மையில் பின்தங்கியுள்ளது. மக்கள் பிரதமர்  நரேந்திர மோடியின் பேச்சை கேட்கிறார்கள், அதனால்தான் மக்கள் அவருக்கு வாக்களிக்கிறார்கள். பிரதமர் தேசத்துக்கு உரையாற்றி ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்று கூற வேண்டாமா? எந்த விலை கொடுத்தாலும் வன்முறையை ஏற்க மாட்டேன் என்று அவர் கூற வேண்டும். சட்ட அமைச்சர் அவரை சமாதானப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். அவர் (பிரதமர் மோடி) எங்கள் பேச்சை கேட்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

கிரண் ரிஜிஜூ

அண்மையில் ராஜஸ்தானில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவா பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட டெய்லர் கண்ணையா லால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து டெய்லர் படுகொலை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உரையாற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி அந்த சம்பவம் தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதனை மனதில் வைத்துத்தான், பிரதமர் எங்கள் பேச்சை கேட்பதில்லை என்று அசோக் கெலாட் கூறினார் என கூறப்படுகிறது.