அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் மீது பஞ்சாப் போலீசார் வழக்கு.. எதிர்க்கட்சிகள் கண்டனம்

 
குமார் விஸ்வாஸ்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின்போது அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் குமார் விஸ்வாஸ் மீது பஞ்சாப் போலீசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களினகீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்.

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவரானத குமார் விஸ்வாஸ், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர நாடான காலிஸ்தானின் பிரதமராக விரும்புவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்து பேட்டியளித்தற்காக  பஞ்சாப் போலீசார் நேற்று குமார் விஸ்வாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இது தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னாள் தலைவர் குமார் விஸ்வாஸ் டிவிட்டரில், தனது வீட்டுக்கு வந்த போலீசாரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், பஞ்சாப் போலீசார் அதிகாலையின் என் வீட்டு வாசலுக்கு வந்தனர். நான் பகவந்த் மானை எச்சரிக்கிறேன், டெல்லியில் அமர்ந்திருக்கும் நபரை (அரவிந்த் கெஜ்ரிவால்) பஞ்சாப் மக்கள் கொடுத்த அதிகாரத்துடன் விளையாட விடுகிறீர்கள், அவர் உங்களுக்கும், பஞ்சாபிற்கும் ஒரு நாள் துரோகம் செய்வார். எனது எச்சரிக்கையை நாடு நினைவில் கொள்ள வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

பகவந்த் மான்

பஞ்சாப் போலீசார் குழு ஒன்று நேற்று குமார் விஸ்வாஸ் வீட்டுக்கு சென்று விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நோட்டீஸ் வழங்கியது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, பஞ்சாப் அரசு காவல் துறையை அரசியல் பழிவாங்கலுக்காக தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.