வாக்கெடுப்புக்கு தயங்கும் ஓபிஎஸ் அணி
மா.செ.க்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கை ஓங்கி ஒலித்ததுமே பொதுக்குழுவில் தன் தலைமையில் ஒற்றைத்தலைமையை கொண்டுவந்து பொதுச்செயலாளர் ஆவதற்கான காரியங்களை செய்துவிட்டார் எடப்பாடி என்பது புரிந்ததால் அப்போது முதல் அமைதியாகவே இருந்து வருகிறார் ஓபிஎஸ். மா.செக்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வைத்தது எடப்பாடி ஆதரவாளர்கள்தான். எடப்பாடியின் ஒற்றைத்தலைமையின் கீழ் அதிமுக வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் ஓங்கி ஒலிக்க, பதிலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் தலைமையில் ஓற்றைத்தலைமை வரவேண்டும் என்று ஓங்கிச் சொல்லவில்லை. இப்போது எதற்கு தேவையில்லாமல் அந்த பிரச்சனையை எடுக்கிறீர்கள் என்றுதான் சொல்லி சமாளித்திருக்கிறார்கள்.
இந்த அதிருப்தியில்தான் மா.செக்கள் கூட்டத்தில் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்திருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், எடப்பாடி மட்டும் அந்த பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
இதனால் ஓபிஎஸ்சை சரிகட்டி விடுவாரோ எடப்பாடி என்கிற பதைபதைப்பில்தன் நேற்று இரவிலும் இன்று காலையிலும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஜேசிடி பிரபாகர் ,வேளச்சேரி அசோக் ,அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் ,முன்னாள் அமைச்சர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் காமராஜ் போன்றோர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
பொதுக்குழுவில் அதிமுகவை ஒற்றைத் தலைமை கொண்டுவர வேண்டும். அது எடப்பாடி தலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அப்படி ஒன்று நடந்தால் அதற்கு நாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் உடனே நேராக வாக்கெடுப்புக்கு போய் விடுவார்கள் . அப்படி ஒருவேளை வாக்கெடுப்பு நடந்தால் அது நமக்குத்தான் விபரீதமாகிவிடும் . பெரும்பான்மையை வைத்திருக்கிறார் எடப்பாடி. அந்த தெம்பில் தான் அவர் ஒற்றைத் தலைமைக்கு முடிவெடுத்துவிட்டார் .
வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி தான் வெற்றி பெற்றுவிடுவார். அப்போது ஓபிஎஸ்க்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும் என்று ஆதரவாளர்கள் சொல்ல, அப்புறம் அதிமுக முழுவதும் எடப்பாடியின் கைக்கு சென்று அதிமுக அவரின் சர்வாதிகாரம் ஆகிவிடும். அதனால் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி முடிவு எடுப்பதற்கு கூடாதென்று தடுத்தாக வேண்டும் என ஆதரவாளர்கள் சொல்ல , அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லையாம் ஓபிஎஸ்.
நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் இரட்டை தலைமை நீடிப்பதுதான் கட்சிக்கு நல்லது என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு மவுனமாகத்தான் இருந்திருக்கிறார் ஓபிஎஸ்.