அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்கு மோடி ஜி ஒரு முன்மாதிரி... ராகுலை மறைமுகமாக தாக்கிய அமித் ஷா

 
அமித் ஷா

அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை மோடி ஜி ஒரு முன்மாதிரியாக காட்டினார் என ராகுல் காந்தியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறைமுகமாக தாக்கினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு ஆஜரானார். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ,க்கள், தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2002 குஜராத் கலவர வழக்கு விசாரணையில் பிரதமர் மோடி நடந்து கொண்ட விதத்தை குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கினார்.

ராகுல் காந்தி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜரான மோடி நாடகம் செய்யவில்லை. சிறப்பு புலனாய்வு குழு முதல்வரிடம் கேள்வி கேட்க விரும்பினால், அவரே ஒத்துழைக்க தயாராக இருந்தார், ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை மோடி ஜி ஒரு முன்மாதிரியாக காட்டினார். அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது (விசாரணை நடந்தது). 

மோடி

ஆனால் யாரும் தர்ணா நடத்தவில்லை, தொண்டர்கள் அவருடன் ஒற்றுமையாக நிற்கவில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைத்தர்கள் மனசாட்சி இருந்தால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2002ம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் நீதிமன்றம் குற்றமற்றவர் என்று கூறியதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த  சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.