எடப்பாடி கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்

 
eps

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் .  நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் ஆணையர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் .

நெடுஞ்சாலை பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டின் மூலமாக 4800 கோடி ரூபாய்  முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று  திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

 மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான இந்த புகாரினை  சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.  இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம்,   எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற  சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது . மேலும்,   இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

h

 இதை அடுத்து ஆர். எஸ் பாரதி தாக்கல் செய்து இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.   ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி இருப்பதால் அவர்களே விசாரணையை தொடரட்டும் என்று சொல்லி மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள ஆர். எஸ். பாரதிய தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனுமதி கோரினார்.  ஆனால்,   எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய  கால அவகாசம் கோரினார்.

 லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர்,  இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி விஜிலென்ஸ் ஆணையருக்கு அறிக்கை அளித்து இருக்கிறது.   விஜிலென்ஸ் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை குறித்து முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு,   லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போது நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.  அதற்கு,   அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்,   எந்த ஒரு தடை உத்திரவும் பிறப்பிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

 இதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையினை நீதிபதி ஏற்க மறுத்தார்.   மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.