முகமது நபிகள் குறித்து சர்ச்சை பேச்சு.. கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்த பா.ஜ.க. தலைமை

 
நுபுர் சர்மா

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை பா.ஜ.க. தலைமை இடைநீக்கம் செய்துள்ளது.

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக அண்மையில் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கலந்து கொண்டார். அப்போது நுபுர் சர்மா, நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முகமது நபிகள் மற்றும் இஸ்லாம் மதத்துக்கு எதிரான தவறான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாகவும் நுபுர் சர்மாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது.

ஞானவாபி மசூதி

இது தொடர்பாக நுபுர் சர்மா கூறுகையில், நான் பேசியதை எடிட்டிங் செய்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் பதிவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் போன்றவை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனக்கோ என் குடும்பத்தினருக்கோ ஏதேனும் அசாம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அந்த செய்தி நிறுவனமே அதற்கு முழுப்பொறுப்பு என தெரிவித்தார்.

பா.ஜ.க.

அதேசமயம், நுபுர் சர்மா விவகாரம் பா.ஜ.க.வுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தொலைக்காட்சி விவாதத்தின்போது முகமது நபியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை பா.ஜ.க. தலைமை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், டெல்லி பா.ஜ.க.வின் ஊடக பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டாலையும் பா.ஜ.க. இடைநீக்கம் செய்துள்ளது.