ஓபிஎஸ் மகனின் பதவியை பறிக்க டெல்லியில் போராடும் தம்பிதுரை

மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தன் பக்கம் இழுத்து ஓபிஎஸ்சை ஓரங்கட்டியதால் அவர் வெடித்து நிற்கும்போது அதிமுக அலுவலகத்தினை பூட்டியதால் அதை உடைத்து உள்ளே சென்றார் ஓபிஎஸ். அதிமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி பொதுக்குழுவை கூட்ட, மாவட்டம்தோறும் புதிய நிர்வாகிகளை , உறுப்பினர்களை அமைத்து வருகிறார். விரைவில் பொதுக்குழுவை கூட்ட இருப்பதற்காகத்தான் இத்தனை ஏற்பாடுகளும் என்று சொல்கிறார்கள். இதில், அதிமுகவின் ஒரே ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் எம்பி பதவியை பறித்து வீட்டுக்கு அனுப்புவதற்காக எடப்பாடி ரொம்பவே அவசரம் காட்டி வருகிறார் என்கிறார்கள். ஆனால் டெல்லி அதற்கு கொஞ்சம் கூட இசையவே இல்லை என்று தெரிகிறது.
ரவீந்திரநாத் அதிமுகவில் இல்லை அவரை தன்னிச்சையாக எம்பி என்று அறிவிக்க வேண்டும் என கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார் . இதை அடுத்து தன்னிச்சையான எம்பி என்று அறிவிக்க கூடாது அவர் அதிமுகவின் எம்.பிதான் என்று ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதி இருந்தார். இதில் ஓபிஎஸ் கடிதத்தையே சபாநாயகர் ஓம் பிரகாஷ் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இந்த முயற்சி தோல்வி அடைந்ததால் எடப்பாடி அணியில் இருக்கும் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்து ரவீந்திரநாத் விவகாரத்தில் எடப்பாடிக்கு சாதகமான முடிவு வருவதற்காக போராடி வருகிறார் . மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவை இதற்காக பலமுறை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் சபாநாயகர் எந்த முடிவு எடுக்காமல் அமைதியாகவே இருக்கிறார்.
ரவீந்திரநாத் தன்னிச்சையாக எம்பி என்று சபாநாயகர் அறிவித்தால் அவர் எந்த ஒரு கட்சியிலும் சேர முடியாது. அப்படி சேர்ந்தால் சட்டப்படி எம்பி பதவியை இழக்க நேரிடும். அப்படி ஒரு நிலை வரவேண்டும் என்பதற்காகத்தான் எடப்பாடி எத்தனை அவசரம் காட்டுகிறார் என்கிறார்கள். ஆனால் அதிமுகவின் எம்பி தான் என்று அசத்துகிறார் ரவீந்திரநாத். நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான சம்சத் டிவியில் மக்களவையில் ரவீந்திரநாத் பேச்சை ஒளிபரப்பும்போது அதிமுக எம்பி என்றுதான் ஒளிபரப்பாகின்றன.