கூவத்தூர் ஸ்டைலில் வென்ற தளபதி - பிடிஆருக்கு பின்னடைவு - மூர்த்தி கை ஓங்கியது

அதிமுகவின் கூவத்தூர் ஸ்டைலில் மதுரை தளபதி எம்எல்ஏவும், அதலை செந்தில்குமார் தங்களது ஆதரவாளர்களை புதுச்சேரியிலும் சென்னையிலும் உள்ள சொகுசு விடுதிகளில் அடைத்து வைத்திருந்தனர். லட்சங்களை வாரி இறைத்தனர். இதில் தளபதி வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கி இருக்கிறது. அதலை செந்தில்குமார் பின்தங்கி விட்டதால் அவருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்த அமைச்சர் பிடிஆர் தியாகராஜனுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
திமுக மாவட்ட செயலாளர் தேர்வில் மதுரை நகரில் இரண்டாக இருந்த அமைப்பு ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டது. ஏற்கனவே நகர் தெற்கு செயலாளராக இருந்த தளபதி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அதலை செந்தில்குமார் போட்டியிட்டனர். தளபதிக்கு அமைச்சர் மூர்த்தியும், அதலை செந்தில்குமாருக்கு அமைச்சர் தியாகராஜனும் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர்.
திமுகவில் 72 மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு இங்கு வட்டம், பகுதி, மாவட்ட பிரதிநிதிகளுக்கு பல லட்சங்கள் வாரி இறைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது அதிமுகவின் கூவத்தூர் பாணியில் தளபதியும், அதலை செந்தில் குமாரும், தங்களது ஆதரவாளர்களை முகாம் மாறிவிடக்கூடாது என்பதற்காக சென்னையிலும் புதுச்சேரியிலும் உள்ள சொகுசு ஹோட்டல்களில் அடைத்து வைத்திருந்தனர்.
நேற்று சென்னையில் நடந்த மனுக்கள் பரிசீலனையில் கடைசி நேரத்தில் அதலை செந்திலுக்கு நிர்வாகிகள் ஆதரவு போதிய எண்ணிக்கையில் இல்லை என்று தெரிய வந்ததால் அவர் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதை அடுத்து தளபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து திமுக நிர்வாகிகள், இந்த தேர்தல் அமைச்சர்கள் மூர்த்திக்கும், பிடிஆர் தியாகராஜனுக்கும் இறையே நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். மதுரை மேயர் தேர்வில் தியாகராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு தனது ஆதரவாளரை பதவிக்கு கொண்டு வந்தார். மாவட்ட செயலாளர் தேர்தலிலும் அவர் மறைமுகமாக செயல்பட்டார் . ஆனால் இந்த தேர்தலில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தளபதியை வெற்றி பெற வைக்க களமிறங்கி இருந்தார்கள். சென்னையில் மூத்த அமைச்சர்கள் பலரும் மறைமுகமாக மூர்த்திக்கு ஆதரவு தெரிவித்ததால் தளபதி வெற்றி பெற்றுள்ளார். தியாகராஜனுக்கு பின்னடைவு தான்.
இதனால் அமைச்சர் மூர்த்தி கை ஓங்கி இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்களோ, அதலை செந்தில் மனுவை வாபஸ் வாங்கவில்லை. தலைமை வெற்றி அறிவித்த பின்னர் கருத்து தெரிவிப்போம் என்று கூறி வருகிறார்கள்.