தென்காசி..முதல்தேதி.. எடப்பாடி டீமை தெறிக்கவிட முடிவு!
வரும் 1ம் தேதி அன்று தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் ஓபிஎஸ்சை வரவேற்க கூட்டத்தை திரட்டி எடப்பாடி டீமை தெறிக்கவிட முடிவெடுத்திருக்கிறது ஓபிஎஸ் டீம்.
ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் இருக்கும் அவரது சிலைக்கு ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உத்தரவின் பேரில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து பேசிய மனோஜ் பாண்டியன், சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். சட்டப் போராட்டம் என்பது முதல் படி தான். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
உண்மையான அதிமுக ஓபிஎஸ் தலைமையில் தான் இருக்கிறது. ஓபிஎஸ் அழைப்பை எதிரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்ட தொண்டர்கள் ஓபிஎஸ்ஐ ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ் விருப்பம். அதனால்தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருந்தார். சசிகலா, டிடிவி தினகரன் இருவரும் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை தான் ஓபிஎஸ் வெளிப்படுத்தி இருக்கிறார் என்ற மனோஜ் பாண்டியன் ,
வரும் ஒன்றாம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார் ஓபிஎஸ். அப்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிக்க இருக்கிறோம் என்றார்.