பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இடைத்தரகர் போல் செயல்படுகிறது... கே.டி. ராமராவ் குற்றச்சாட்டு

 
மோடி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இடைத்தரகர் போல் செயல்படுகிறது என தெலங்கானா அமைச்சர் கே.டி.ராம ராவ் தெரிவித்தார்.

எரிபொருள் விலை உயர்வு தொடா்பாக மத்திய அரசை தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ்  கடுமையாக தாக்கியுள்ளார். கே.டி. ராமராவ் கூறியிருப்பதாவது: கச்சா எண்ணெய்யை மலிவாக வாங்கி, பெட்ரோல் மற்றும் டீசலை அதிக விலைக்கு வாங்கி விற்கும் அதேவேளையில், விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளை வெட்கமின்றி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இடைத்தரகர் போல் செயல்படுகிறது. பெட்ரோல் விலையை பெருமளவில் உயர்த்தும் அதேவேளையில், மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டம் என்ற அபத்தமான  வாதத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. 

கே.டி.ராம ராவ்

விலைவாசியை கட்டுப்படுத்தாததற்கு மோடி அரசு கூறும் காரணங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய். சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா-உக்ரைன் போர் என பா.ஜ.க. தலைவர்கள் எளிமையாக கதை சொல்கின்றனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் விலைவாசி உயர்கிறது என்று கூறும் மத்திய அமைச்சர்கள், அந்த நாடுகளில் பெட்ரோல் விலை நம்மை விட குறைவாக உள்ளது என்பதை வேண்டுமென்றே மறைக்கின்றனர். 

பெட்ரோல்

2017ம் ஆண்டு குஜராத் தேர்தல், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல் என பல வாரங்கள், மாதங்களாக பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை. ஆனால் தேர்தல முடிவுகள் வெளியானதில் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது. கடந்த 15 தினங்களில், மோடி அரசு பெட்ரோல் விலையை  13 முறையை உயர்த்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.