தெலங்கானா சிறுத்தைகளும் தமிழக சிறுத்தைகளும்
தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ், தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு புதிய பெயர் வைத்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில், ஏற்கனவே உள்ள டி.ஆர்.எஸ் எனும் தெலங்கானா ராஷ்டிர சமிதி என்கிற கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றி இருக்கிறார். செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சி தலைவர்களை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் . மேலும் தேசிய அளவில் அரசியலில் பங்கெடுப்பது குறித்து கடந்த சில மாதங்களாகவே ஆலோசித்து வரும், சந்திரசேகராவ் தற்போது தனது கட்சியை தேசியக் கட்சியாக மாற்றி அறிவித்திருக்கிறார். மேலும், டிசம்பர் 9ஆம் தேதி கட்சி சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் சந்திரசேகர ராவ் உரையாற்ற இருக்கிறார்.
தனது மாநில கட்சியை தேசிய கட்சியாக சந்திரசேகரராவ் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும். எம்.பியுமான திருமாவளவன் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர், ‘’தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அழைப்பை ஏற்று ஹைதரபாத் வந்துள்ளேன். அவர் பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் தேசியக் கட்சியைத் தொடங்கினார். அதில் பங்கேற்றேன். தேசிய அளவிலான அரசியலில் கவனம் செலுத்திட முனையும் கேசிஆர் எமது வாழ்த்துகள் தெரிவித்தேன்.
முன்னதாக தெலங்கானா 'முதல்வர் அரண்மனையில்' இன்று காலை சிற்றுண்டி அளித்தார் முதல்வர் கேசிஆர். அப்போது கர்நாடகா மேனாள் முதல்வர் குமாரசாமிகவுடா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட வட இந்திய தலைவர்கள் மற்றும் நான் ஆகியோருடன் முதல்வர் கேசிஆர், அவரது மகன் அமைச்சர் கேடிஆர் பங்கேற்றோம்.
பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் புதிய கட்சியைத் தொடக்க நிகச்சிக்கு வந்த பிற மாநிலத் தலைவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர் கேசிஆர். ’’என்று குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன்.
மேலும், ஹைதராபாத் ஐடிசி ஓட்டலில் ஆந்திரபிரதேசம் மற்றும் தெலங்கானா சிறுத்தைகளும் தமிழக சிறுத்தைகளும் சந்தித்து நலம் விசாரித்தோம் என்று கூறியிருக்கிறார் .