பீகார் கும்பல் மாநிலத்தை கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.. சர்ச்சையில் சிக்கிய தெலங்கானா காங்கிரஸ் தலைவர்

 
ரேவந்த் ரெட்டி

பீகார் கும்பல் தற்போது மாநிலத்தை கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி.

தெலங்கானா காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ரேவந்த் ரெட்டி, பீகார் அதிகாரிகளை குறிப்பிட்டு  பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரேவந்த் ரெட்டி கூறியதாவது: தெலங்கானா தலைமை செயலாளர் சோமேஷ் குமார், நகராட்சி நிர்வாக செயலாளர் அரவிந்த் குமார், மற்றொரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் சுல்தானியா, நீர்பாசன செயலாளர் ரஜத் குமார் மற்றும் பொறுப்பு டி.ஜி.பி. அஞ்சனி குமார் ஆகியோர் பீகாரை சேர்ந்தவர்கள். பீகார் பேட்ச்தான் மாநிலத்தில் ஆட்சி செய்கிறது.

கே.சந்திரசேகர் ராவ்

கே.சந்திரசேகர் ராவ் பயந்து பீகார் சென்று பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தார். தனது வெற்றியை (எதிர்வரும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில்) உறுதி செய்வதற்காக பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்துள்ளார். போலீஸ் தலைமை டி.ஜி.பி. மகேந்தர் ரெட்டியை முதல்வர் சந்திரசேகர் ராவ் ராஜினாமா செய்ய சொல்கிறார். முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மூதாதையர்கள் பீகாரை சேர்ந்தவர்கள்.

பிரசாந்த் கிஷோர்

பீகார் கும்பல் தற்போது மாநிலத்தை கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பீகார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பீகார் அமைச்சருமான குமார் ஜா கண்டம் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரத்துவம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய பிராந்தியத்தின் மீதான அவரது வெறுப்பையும், அக்கறையின்மையையும் இது பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.