தெலங்கானா முதல்வரின் மகன் கே.டி. ராமராவ் போதைக்கு அடிமையானவர்.. பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு

 
கே.டி.ராம ராவ்

தெலங்கானா முதல்வரின் மகனும், அம்மாநில அமைச்சருமான கே.டி. ராமராவ் போதைக்கு அடிமையானவர் என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் குற்றம் சாட்டினார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ் கடந்த சில தினங்களுக்கு முன், தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமாருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பண்டி சஞ்சய் குமார் பதிலடி கொடுத்துள்ளார். நிர்மலில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பண்டி சஞ்சய் குமார் பேசுகையில் கூறியதாவது: 

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

நான் புகையிலை மெல்லுகிறென் என்கிறார் இந்த டிவிட்டர் தில்லு (கே.டி.ராமராவ்). இது அப்பட்டமான பொய். உண்மையில் போதைக்கு அடிமையானவர் கே.டி.ராமராவ். நான் புகையிலையை உட்கொள்வதில்லை என்பதை நிரூபிப்பதற்காக எனது இரத்த மாதிரிகளை உட்பட எனது உடலின் எந்த பகுதியையும் பரிசோதிக்கத் தயாராக இருக்கிறேன். தான் போதை மருந்து சாப்பிடவில்லை என்பதை நிரூபிக்க கே.டி. ராமராவ் தனது ரத்தம் மற்றும் முடி மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுக்க தைரியம் உள்ளதா?

பண்டி சஞ்சய் குமார்

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் (கே.டி. ராமராவ்) தலையீட்டை மூடிமறைப்பதற்காகவே மட்டுமே அவை மூடப்பட்டது. தெலங்கானா அரசு அம்பேத்கரின் பிறந்தநாளை ஏப்ரலில் குறைந்தது ஒரு வாரமாவது கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.