டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்துக்களை அவமதிக்கும் பழக்கத்தை கொண்டவர்... தேஜஸ்வி சூர்யா குற்றச்சாட்டு

 
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்துக்களை அவமதிக்கும் பழக்கத்தை கொண்டவர் என்று பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு தலைவர் தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார்.

காஷ்மீர் பண்டிட்களை அரவிந்த் கெஜ்ரிவால் கேலி செய்ததாகக் கூறி மன்னிப்பு கேட்கக்கோரி டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் இல்லத்தில் பா.ஜ.க.வின் இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் தொண்டர்கள்   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள  சிசிடிவி கேமராக்கள் மற்றும் வீட்டுக்கு வெளியே உள்ள தடுப்புகளை பா.ஜ.க.வினர்  சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

அப்போது மணிஷ் சிசோடியா கூறியதாவது: பஞ்சாப் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க.வால் தோற்கடிக்க முடியாததால், பா.ஜ.க. இப்போது அவரை கொல்ல விரும்புகிறது. இன்றைக்கு (நேற்று) முதல்வர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், காவல்துறையின் உதவியுடன் அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க. கொல்ல விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. இதற்கு எதிராக நாங்கள் முறையான புகார் அளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேஜஸவி சூர்யா

பா.ஜ.க.வின் இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கெஜ்ரிவால் இந்துக்களை அவமதிக்கும் பழக்கத்தை கொண்டவர். அவர் காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலையை கேலி செய்வது மட்டுமல்லாமல், அவரது மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன என்றும், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆதரவாக இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார். தேஜஸ்வி சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பில், பா.ஜ.க. தொண்டர்களை குண்டர்கள் என்று அழைத்ததற்காக மணிஷ் சிசோடியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.