எனக்கு இன்னும் தோசை வரவில்லை.. இதிலும் மோசடி.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா

 
தேஜஸ்வி சூர்யா

காங்கிரஸ் என் வீட்டுக்கு அனுப்பியதாக கூறிய தோசை இன்னும் வரவில்லை  அவர்கள் இதிலும் மோசடி செய்கின்றனர் என அந்த கட்சியை பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யா தாக்கினார்.

கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரு மக்களவை தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் பா.ஜ.க.வின் தேஜஸ்வி சூர்யா. கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அந்நகரே தண்ணீரில் மிதந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த சூழ்நிலையில், தேஜஸ்வி சூர்யா தனது தொகுதியில் உள்ள உணவகத்தில் தோசையை ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ்

பெங்களூரு நகரம் தண்ணீரில் மூழ்கியபோது தோசையை ருசித்து சாப்பிட்ட தேஜஸ்வி சூர்யாவை பொறுப்பற்றவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும்,  பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு பெங்களூருவில் உள்ள சிறந்த ஹோட்டல்களில் இருந்து 10 விதமான தோசைகளை அனுப்பியதாக 2 தினங்களுக்கு முன் காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால் எனக்கு இன்னும் தோசை வரவில்லை என்றும் இதிலும் கூட மோசடி செய்கிறார்கள் என்று தேஜஸ்வி சூர்யா  பதிலடி கொடுத்தார்.

தேஜஸ்வி சூர்யா

தேஜஸ்வி சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ்  ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, மசாலா தோசை என் வீட்டுக்கு அனுப்பியதாக அறிவித்தது. 24 மணி நேரத்துக்கும்  மேலாகியும் இன்னும் அது எனக்கு கிடைக்கவில்லை. அவர்கள் இங்கும் மோசடி செய்துள்ளனர். அவர்களால் சரியாக தோசை வழங்க முடியாது, அவர்கள் நல்லாட்சியை வழங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள் என பதிவு செய்து இருந்தார்.