பா.ஜ.க. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.. தேஜஸ்வி யாதவ் உறுதி
பா.ஜ.க. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், பீகார் துணை முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பேசுகையில் கூறியதாவது: 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்துவதற்காக அக்டோபர் 10ம் தேதி டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு திறந்த மாநாட்டை நடத்தும். எதிர்க்கட்சிகள் டெல்லிக்கு வந்து பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். எங்களுக்கு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் தேவை. ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம் அல்ல. பா.ஜ.க. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பேசுகையில், 2024ல் பா.ஜ.க. அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம். விரைவில் நான் நிதிஷ் குமாருடன் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திப்பேன். மேலும் ராகுல் காந்தி தனது யாத்திரையில் (இந்திய ஒற்றுமை பயணம்) இருந்து திரும்பியதும் அவரை சந்திப்பேன் என தெரிவித்தார்.