அக்னிபாத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு 75 சதவீத ராணுவ வீரர்களை வேலையில்லாமல் ஆக்கிவிடும்.. தேஜஸ்வி யாதவ்

 
மக்களின் உயிர்களை விட உங்க இமேஜ் முக்கியமா?… முதல்வர் நிதிஷ் குமாரிடம் கேள்வி கேட்கும் தேஜஸ்வி யாதவ்

அக்னிபாத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 75 சதவீத ராணுவ வீரர்களை வேலையில்லாமல் ஆக்கிவிடும் என்று நம்பப்படுகிறது என தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு அண்மையில் ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

அக்னிபாத் திட்டம்

அக்னிபாத் திட்டத்தை திரும்பக்கோரி, பீகாரில்  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட அந்த கட்சியின் தொண்டர்கள் பாட்னாவில் பீகார் சட்டப்பேரவையிலிருந்து கவர்னர் மாளிகை எதிர்ப்ப பேரணி நடத்தினர். தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எக்காரணம் கொண்டும் இளைஞர்களின் எதிர்காலத்தில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை. மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இந்த மக்கள் (அக்னிவீரர்கள்) தங்கள் சொந்த எதிர்காலத்தை பற்றி நிச்சயமற்றவர்களாக உணர்ந்தால், அவர்கள் எப்படி எல்லையை பாதுகாக்க போகிறார்கள். 

எப்.ஐ.ஆர்.

நாங்கள் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளோம். அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 75 சதவீத ராணுவ வீரர்களை வேலையில்லாமல் ஆக்கிவிடும் என்று நம்பப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர்.களையும் ரத்து செய்து அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.