லாலு பிரசாத் யாதவை விடுதலை செய்யக்கோரி, நீதி யாத்திரை தொடங்கிய தேஜ் பிரதாப்

 
லாலுவை விடுதலை செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய மகன் தேஜ் பிரதாப்…

கால்நடை தீவனம் தொடர்பான  ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவை  விடுதலை செய்யக்கோரி அவரது மகன் தேஜ் பிரதாப் பீகாரில் நீதி யாத்திரையை நேற்று தொடங்கினார்.

லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது கால்நடை தீவனங்கள் வாங்கியதில்  ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு எதிராக மட்டும் 5 வழக்குகள் பதிவாகின. அதில், டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.55 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75  பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் நீதிமன்றம் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. 

லாலு பிரசாத் யாதவ்

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவை விடுதலை செய்யக்கோரி அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் நேற்று நீதி யாத்திரை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக தேஜ் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது தந்தைக்காக மாநிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று பிரச்சாரம் செய்வேன். சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகளின் குரல்களை எழுப்பியதற்காக எனது தந்தை பாதிக்கப்பட்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மேலிடத்தின் செய்தியை தாங்கிய ரதம், நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமங்கள் வழியாக செல்லும் என்று தெரிவித்தார்.

தேஜஸ்வி யாதவ்

தேஜ் பிரதாப் கடந்த ஆண்டு தொடங்கிய ஒரு சுயாதீன மாணவர் அமைப்பான சத்ர ஜனசக்தி பரிஷத்தின் கீழ் இந்த யாத்திரை லக்னோவில் தொடங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் லாலு பிரசாத் யாதவுக்கு நீதிமன்றம் சிறைதண்டனை விதித்த பிறகு, அவரது இளையமகன் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: லாலு ஜி பா.ஜ.க.வுடன் கை குலுக்கியிருந்தால், அவரை ராஜா, ஹரிசந்திரா என்று அழைக்கப்பட்டு இருப்பார். ஆனால் அவர் (லாலு) ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுகிறார். அதனால் அவர் சிறைவாசத்தை எதிர்கொள்கிறார்.. இதற்கு நாங்கள்  பயப்பட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.