‘’ஏதோ அறிவாளித்தனமாக பேசியதாக நினைக்க வேண்டாம்! இடது பக்கம் பாருங்க...''

 
va

 தமிழகம் என்று சொல்வதை விட தமிழ்நாடு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர். என். ரவி பேசியது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.  இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரை வாசித்தபோது உரையிலிருந்து தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து பேசி இருக்கிறார் ஆளுநர்.  

இதற்கு முதல்வர் ஸ்டாலின் அப்போது கண்டனம் தெரிவித்ததால் மேலும் ஆளுநர் தரப்பில் இருந்து தமிழ்நாடு என்று சொல்வதை தவிர்த்து அடுத்தடுத்த அதிரடி அம்புகள் பாய்கின்றன.   ஆளுநர் வெளியிட்ட பொங்கல் அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று அச்சிடப்பட்டிருக்கிறது.  இதே முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாடு ஆளுநர் என்று அச்சிடப்பட்டு இருந்தது .

mk

இது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  ‘தமிழக ஆளுநர்’ என்றுதான் மீடியாக்களே குறிப்பிடுகின்றன. மாநில அரசு கூட தங்களுடைய விளம்பரத்தில் ‘தலை நிமிர்ந்து தமிழகம்’ என்றெல்லாம் சொல்வதில்லை.   தமிழகம் என்ற வார்த்தை சட்ட விரோதமான வார்த்தையா என்ன?  இந்திய ஒற்றுமை பாட்டுக்கு எதிரான வார்த்தையா என்ன? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

 தமிழ்நாடு சட்டப்பேரவை முன்பாக உள்ள அடிக்கல் நாட்டு விழா கல்லை படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் வானதி.  அதில், சட்டப்பேரவையின் முன் ...கண்ணில் பட்டது... என்று பதிவிட்டிருக்கிறார்.  அந்த கல்வெட்டில்,   மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதேபோன்று மாண்புமிகு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   அதே போல, திமுக அரசும்,  திமுகவினரும் மத்திய அரசு என்பதை தற்போது ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருகிறது. ஆனால் முன்னர் மத்திய அரசு என்றுதான் திமுகவும் திமுகவினரும் சொல்லி வந்தார்கள் என்பதற்கு சான்றாகவும் இந்த கல்வெட்டு ஆதாரமாக அமைந்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

 இதற்கு நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.  தமிழகம் முதல்வர் என்று இருப்பதற்கு மேலே பாருங்க தமிழ்நாடு அரசு என்று இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.   மேலும்  நாங்க தமிழ்நாடு, தமிழகம் இரண்டுமே சொல்லுவோம் . ஆனால்  நீங்களோ தமிழகம் என்று மட்டும் தான் சொல்லணும் என்றும் தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது எனச் சொன்னால் எதிர்ப்போம்.  புரிந்துதா என்கிறார்கள்.

 ஏதோ அறிவாளித்தனமாக பேசியதாக நினைக்க வேண்டாம் இடது பக்கம் பாருங்க தமிழ்நாடு அரசு இலச்சினை உள்ளது என்கிறார்கள். ; தமிழகம் என்பது பேச்சு வழக்கு தமிழ்நாடு என்பது அரசியல் சாசனத்தில் உள்ளது.   தமிழகம் என சொல்வது தவறு என சொல்லவில்லை . தமிழ்நாடு என்று ஏன் சொல்ல வேண்டும் அந்த வார்த்தை வேண்டாம் என சொல்வதை தான் எதிர்க்கிறோம் என்கிறார்கள்.