அனைத்து எப்.ஐ.ஆர்.களுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.. நான் பின்வாங்க மாட்டேன்... கெஜ்ரிவாலுக்கு சவால் விட்ட பக்கா

 
தஜிந்தர் பால் சிங் பக்கா

நீங்கள் பதிவு செய்யும் அனைத்து எப்.ஐ.ஆர்.களுக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் பின்வாங்க மாட்டேன் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க.வின் தஜிந்தர் பால் சிங் பக்கா சவால் விடுத்துள்ளார்.

பஞ்சாப் போலீசார் ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லியில் ஜனக்புரியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்தனர். டெல்லியிலிருந்து பக்காவை பஞ்சாப் போலீசார் மொஹாலிக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர். வரும் வழியில் ஹரியானா போலீசார் பஞ்சாப் போலீசாரின் வாகனத்தை மறித்து குருக்ஷேத்ராவில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அடுத்த சில மணி நேரத்தில் குருஷேத்ரா காவல் நிலையத்துக்கு வந்த டெல்லி போலீசார் பஞ்சாப் காவல் துறையினரிடமிருந்து  தஜிந்தர் பால் சிங் பக்காவை டெல்லிக்கு அழைத்து சென்றனர். பின்னர் தஜிந்தர் பால் சிங் பக்கா விடுவிக்கப்பட்டார்.

எப்.ஐ.ஆர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மொஹாலி நீதிமன்றம், பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் தஜிந்தர் பால் சிங் பக்காவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து தஜிந்தர் பால் சிங் பக்கா பஞ்சாப் அண்ட் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மே 10ம் தேதி வரை பக்காவுக்கு எதிராக எந்த ஒரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் நேற்று தஜிந்தர் பால் சிங் பக்கா செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க. தொண்டர்களை மிரட்ட நீங்கள் (கெஜ்ரிவால்) எத்தனை எப்.ஐ.ஆர். போட்டாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். எனக்கு எதிராக நீங்கள் பதிவு செய்யும் அனைத்து எப்.ஐ.ஆர்.களுக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் பின்வாங்க மாட்டேன். கெஜ்ரிவால் எவ்வளவு பயப்படுகிறார் என்பதை எனக்கு பின்னால் பஞ்சாப் காவல்துறையை அனுப்பியது  காட்டுகிறது என தெரிவித்தார்.