ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரன்! சசிகலா பிரச்சாரம்?

 
ttv dhinakaran

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட நிர்வாகிகள் விரும்புவதாகவும், கட்சியின் நிலைப்பாடு 27 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Not AIADMK merger, but expulsion of Sasikala led TTV Dinakaran on revolt  path - India Today


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு,  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், “ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் விரும்புகிறோம். கட்சி நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து போட்டியிடுவதா என்பது குறித்த அறிவிப்பை 27-ஆம் தேதி அறிவிக்கப்படும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம். அதற்கு தேவையான பணிகளை செய்ய தயாராக இருக்கிறோம். அதிமுகவை பொறுத்த வரையில் இரட்டை இலை சின்னம்தான் தற்போது தலைமை தாங்கி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்தை மட்டுமே நம்பி இருக்கிறார். 

ஈரோடு கிழக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். நான் கூட போட்டியிட வாய்ப்பு உள்ளது. நான் தேர்தலில் நிற்பதற்கு பயப்படவில்லை. ஆர் கே நகர் தொகுதியில் திமுகவை டெபாசிட் இழக்க செய்ததும் நாங்கள்தான். அதிமுகவின் பொதுச் செயலாளர் என சசிகலா கூறிக் கொண்டிருக்கும் சூழலில் அவரை எப்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பிரச்சாரத்திற்கு அழைப்பது? தேர்தல் தோல்வியை கண்டு தாங்கள் துவண்டு போகவில்லை. கஜினி முகமது தொடர்ந்து படை தொடுத்தது போல தொடர்ந்து தேர்தலை சந்திப்போம்” எனக் கூறினார்.