ஏஜென்சிகளிடமிருந்து அழைப்பு வந்ததும், காங்கிரஸின் தலைமை பயத்தில் நடுங்க தொடங்கியது... திரிணாமுல் காங்கிரஸ்

 
திரிணாமுல் காங்கிரஸ்

ஏஜென்சிகளிடமிருந்து (அமலாக்கத்துறை)  தங்களுக்கு அழைப்பு வந்ததும், காங்கிரஸின்  உயர் மட்ட தலைமை பயத்தில் நடுங்க தொடங்கியது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று   ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருந்தது. காங்கிரஸ் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸின் அரசியல் ஊதுகுழலான ஜாகோ பங்களா பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஏஜென்சிகளிடமிருந்து அழைப்பு வந்ததும், காங்கிரஸின்  உயர் மட்ட தலைமை பயத்தில் நடுங்க தொடங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் அதன் பார்வையில் தெளிவாக உள்ளது. காங்கிரஸின் இந்த நாடு தழுவிய போராட்ட அழைப்பு, சந்தர்ப்பவாதம் மற்றும் இரட்டை நிலை அரசியலுக்கு ஒரு உதாரணம். மாநிலத்தில் தனது கட்சியின் (காங்கிரஸ்) எண்ணிக்கையை பூஜ்ஜியத்துக்கு  கொண்டு வந்த  மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி, தினமும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தாக்கி வருகிறார். 

மேற்கு வங்க காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி… தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம்..

அவரும் அல்லது காங்கிரஸ் தலைமையும் இப்போது என்ன சொல்ல வேண்டும்? திரிணாமுல் காங்கிரஸூக்கு எதிராக மத்திய அமைப்புகளின் (சி.பி.ஐ., வருமான வரி, அமலாக்கத் துறை) தாக்குதலை அவர் (ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி) பாராட்டியது போல், ராகுல்-சோனியாவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கையை அவர் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.