மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இரட்டை உத்தியை மேற்கொண்டது.. திரிணாமுல் காங்கிரஸ்

 
சுகேந்து சேகர் ராய்

மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இரட்டை உத்தியை மேற்கொண்டது என்று திரிணாமுல் காங்கிரஸின் சுகேந்து சேகர் ராய் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக பா.ஜ.க. உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு பா.ஜ.க. கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தை கைப்பற்ற மத்திய பா.ஜ.க. அரசு இரட்டை கொள்கையை கடைபிடித்துள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸின் சுகேந்து சேகர் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை தலைமை கொறடாவும், அந்த கட்சியின் செய்தி தொடர்பாளருமான சுகேந்து சேகர் ராய் கூறியதாவது: 2021ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்ட பின்னர், மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசாங்கம் இரட்டை உத்தியை மேற்கொண்டது. பீகாரின் பூர்ணியா, சஹர்ஷா, கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் ஆகியவற்றை மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர், ஜல்பைகுரி, அலிபுர்துவார்  ஆகியவற்றுடன் சேர்ந்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்குவதன் மூலம் மேற்கு வங்கத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை பிரிப்பது. 

பா.ஜ.க.

எம்.என்.ஆர்.ஈ.ஜி.ஏ., பி.எம்.ஏ.ஒய்.-கிராமின் மற்றும் பி.எஸ்.ஒய். போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கை மறுப்பதன் மூலம் மேற்கு வங்கத்துக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்துகிறது. இருப்பினும் மேற்கு வங்க மக்கள், மத்திய அரசின் இந்த தீய திட்டங்களை முறியடிப்பார்கள், 1905 முதல் 10 வரையிலான காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்த அதேவழியில்  செய்வார்கள். அப்போது காலனித்துவ ஆட்சியாளர்கள் மேற்கு வங்க பிரிவினையின் முடிவை திரும்ப பெற  வேண்டியிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.