அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது... திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
அமலாக்கத்துறை

அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் புதிய விசாரணைக்காக, செப்டம்பர் 2ம் தேதியன்று கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை புதயி சம்மன் அனுப்பியுள்ளது.

அபிஷேக் பானர்ஜி

அபிஷேக் பானர்ஜியை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை மத்தியஅரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறுகையில்,  அமலாக்கத்துறை அபிஷேக் பானர்ஜியை விசாரணைக்கு அழைத்துள்ளது. எப்பொழுதும் போல் அவர் தலை நிமிர்ந்து அவர்களுடன் ஒத்துழைப்பார். இது ஒரு அரசியல் பழிவாங்கல். நான் இதை கண்டிக்கிறேன்.

சவுகதா ராய்

மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, டெல்லி, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் ஜார்க்கண்டிலும் அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் இதை பார்த்து, அமலாக்கத்துறையை ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலை அமைப்பாக மாற்றுவதற்கான எங்கள் கோரிக்கையில் இணைவர்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.