எந்த அளவுகோலின் அடிப்படையில் ஜகதீப் தங்கரை வேட்பாளராக தேர்வு செய்தீங்க.. பா.ஜ.க.விடம் கேள்வி கேட்ட திரிணாமுல் காங்கிரஸ்

 
ஜெகதீப் தங்கர்

எந்த அளவுகோலின் அடிப்படையில் ஜகதீப் தங்கரை துணை குடியரசு தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. தேர்வு செய்தது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைய உள்ளது. இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (ஜூலை 19) கடைசி நாளாகும். இந்நிலையில், நேற்று முன்தினம் பா.ஜ.க., துணை குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க முதல்வர் ஜகதீப் தங்கர் போட்டியிடுவார் என்று அறிவித்தது.

பா.ஜ.க.

மேற்கு வங்க கவர்னராக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு ஜகதீப் தங்கர் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், எந்த அளவுகோலின் அடிப்படையில் ஜகதீப் தங்கரை துணை குடியரசு தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. தேர்வு செய்தது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவுகதா ராய்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் இது தொடர்பாக கூறியதாவது: எந்த அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கரை துணை குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக தேர்வு செய்தது. துணை குடியரசு தலைவர் தேர்தலில் சிறுபான்மை வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர்கள் (பா.ஜ.க.) அதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அக்கட்சி மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.