ஒரு அரசியல் கட்சி ஒரு அரசியல் கட்சியை போல இயங்க வேண்டும், ஒப்பந்தக்காரரால் அல்ல... கல்யாண் பானர்ஜி

 
கல்யாண் பானர்ஜி

ஒரு அரசியல் கட்சி ஒரு அரசியல் கட்சியை போல இயங்க வேண்டும், ஒப்பந்தக்காரரால் அல்ல என பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி விமர்சனம் செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொண்டது. திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும், அவரது ஐ-பேக் நிறுவனமும் இருந்தது. இதனால் மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தத்தை நீடித்தார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரின் செல்வாக்கு அதிகரித்தது.

பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில், சமீபகாலமாக பிரசாந்த் கிஷோர் மீது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் இது வெளிப்படையாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், செரம்பூர் மக்களவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தை விமர்சனம் செய்து இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஐ-பேக்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், ஒரு அரசியல் கட்சி ஒரு அரசியல் கட்சியை போல இயங்க வேண்டும், ஒப்பந்தக்காரரால் அல்ல. நான் இப்பகுதியில் இருந்து எம்.பி.யாக இருந்தேன், ஆனால் மாநகராட்சியில் நிர்வாகிகள் குழு நியமனம் குறித்து என்னிடம் இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. ஆனால் நிர்வாக குழுவில் பலரை ஐ-பேக் நியமித்துள்ளது. இப்போது இதை மக்களுக்கு விளக்கு எனக்கு கடினமாக உள்ளது என்று தெரிவித்தார்.