2024ல் ஆர்.எஸ்.எஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவரால் மம்தா பிரதமராக பதவியேற்பார்.. திரிணாமுல் காங்கிரஸ்

 
மம்தா பானர்ஜி

2024ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவரால் மம்தா பானர்ஜி பிரதமராக பதவியேற்பார் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் ஒராண்டு நிறைவை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் டிவிட்டரில், திரிணாமுல் காங்கிரஸின் சிப்பாய் என்ற முறையில், 2036 வரை மேற்கு வங்கத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருப்பார். 

அபிஷேக் பானர்ஜி

2036ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் முதல்வராக அபிஷேக் பானர்ஜி பதவியேற்கும் விழாவில் மம்தா பானர்ஜி பாதுகாவலராக இருப்பார். ஜோதிபாசுவின் (நீண்ட காலம் முதல்வராக இருந்த) சாதனையை முறியடிப்பதன் மூலம் மம்தா பானர்ஜி இந்தியாவில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குவார் என பதிவு செய்து இருந்தார். ஜோதிபாசு 1977 ஜூன் 21 முதல் 2000 நவம்பர் 5ம் தேதி வரை சுமார் 23 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வராக பதவி வகித்தார்.

அபரூபா போடார்

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா போடார் டிவிட்டரில், 2024ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவரால் மம்தா பானர்ஜி பிரதமராக பதவியேற்பார். அபிஷேக் பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக பதவியேற்பார் என பதிவு செய்து இருந்தார். அதேசமயம் அந்த டிவிட்டை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அபரூபா போடார் நீக்கி விட்டார்.