இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நேர்ந்த கதியை மோடியும் சந்திக்க நேரிடும்... திரிணாமுல் காங்கிரஸ்

 
பிரதமர் மோடி

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நேர்ந்த கதியை பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்க நேரிடும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது, அந்நாட்டிடம் அன்னிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியாகி விட்டதால் இந்தியா போன்ற மற்ற நாடுகள் அளிக்கும் உதவியை இலங்கை அதிகம் சார்ந்திருக்கிறது. இலங்கையை மோசமான பொருளாதார சூழலுக்கு தள்ளிய அரசாங்கம் மீது அந்நாட்டு மக்கள் மிகவும் கோபத்தில் இருக்கின்றனர். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக்கோரி அதிபர் மாளிகை முன்னால் கடந்த சில தினங்களுக்கு முன் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கை அதிபர் ராஜபக்ச, அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டு இருந்த தடுப்புகளை தகர்த்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடினார். இதே போன்ற நிலைமை நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இட்ரிஸ் அலி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சீல்டா மெட்ரோ ரயில் நிலைய திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த திட்டத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இட்ரிஸ் அலி கூறுகையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நேர்ந்த கதியை பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்க நேரிடும். ரயில் நிலைய திறப்பு விழாவுக்கு மம்தா பானர்ஜி அழைக்காதது அநீதி. அவர் (மம்தா பானர்ஜி) ரயில்வே அமைச்சராக இருந்தபோது இந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாநில அரசின் முக்கியஸ்தர்கள் யாரும் அழைக்கப்படாததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.