விற்கப்படும் மதுபான பிராண்டுகள் குறைந்த தரம் மற்றும் ஸ்லோ பாய்சனாகவும் உள்ளது... தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு

 
தெலுங்கு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் விற்கப்படும் மதுபான பிராண்டுகள் குறைந்த தரம் மற்றும் ஸ்லோ பாய்சனாகவும் உள்ளது என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆந்திராவில் கடந்த பிப்ரவரி நடுப்பகுதி முதல் மார்ச் முதல் வாரம் வரையிலான காலத்தில் மதுவால் நிகழ்ந்த 26 இறப்புகளுக்கு ஜே பிராண்ட் மதுதான் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.மேலும், கடந்த 14ம் தேதி முதல்  நாரா லோகேஷ் தலைமையில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர சட்டப்பேரவை வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த போராட்டத்தை  மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் கள்ளச்சாராயம் அதிகரித்து வருவதை கண்டித்தும், ஆளும் ஓய்.எஸ்.ஆர்.சி.பி. அரசாங்கத்தை கண்டித்தும் விஜயவாடாவில் நேற்று தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த பெண்கள், இளைஞர் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. காட்டே ராமமோகன் மதுபான பிராண்டை காட்டி பேசுகையில் கூறியதாவது:  ஆந்திராவில் விற்கப்படும் மதுபான பிராண்டுகள் மற்ற மாநிலங்களில் விற்கப்படுவதில்லை.

தெலுங்கு தேசம் கட்சி

இது (மதுபானங்கள்) ஓய்.எஸ்.ஆர்.சி.பி. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வரின உறவினர்களால் தயாரிக்கப்பட்டது, அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். விற்கப்படும்  மதுபான பிராண்டுகள் குறைந்த தரம் மற்றும் ஸ்லோ பாய்சனாகவும் உள்ளது. இது  ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.