தைரியம் இருந்தால் மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதை நிறுத்துங்கள்.. மம்தாவுக்கு சுவேந்து சவால்

 
மம்தா பானர்ஜி

உங்களுக்கு தைரியம் இருந்தால் மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதை நிறுத்துங்கள் என்று மறைமுகமாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வின் சுவேந்து ஆதிகாரி சவால் விடுத்தார்.


மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்நகர், வங்கதேசத்தில் வேரூன்றிய மட்டுவாக்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி. இங்கு நடைபெற்ற கூட்டத்தில், பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வும், மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து ஆதிகாரி பேசுகையில் கூறியதாவது: சட்டப்பூர்வ ஆவணங்களுடன் ஒருவர் நம்பகமான குடியிருப்பாளராக இருந்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குடியுரிமை திருத்த சட்டம் பரிந்துரைக்கவில்லை.

குடியுரிமை திருத்த சட்டம்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நாம் பலமுறை விவாதித்தோம். இது மாநிலத்தில் அமல்படுத்தப்படும். உங்களுக்கு (மம்தா பானர்ஜி) தைரியம் இருந்தால், குடியுரிமை  திருத்த  சட்டம் அமல்படுத்துவதை நிறுத்துங்கள். மட்டுவா சமூக உறுப்பினர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சரும், பா.ஜ.க. எம்.பி.யுமான சாந்தனு தாக்கூர் கூறுகையில், மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் உண்மையாக இருக்கும், இலக்கை அடைவதில் நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

சுவேந்து ஆதிகாரி

அதேசமயம், மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், 2023 பஞ்சாயத்து  தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் சீட்டுடன் பா.ஜ.க. வாக்கு வங்கி அரசியலில் விளையாடுகிறது. ஆனால் அது நடக்க நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.