மேற்கு வங்கத்தில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி வருவது குற்றமா?.. அவமானம்.. மம்தா அரசை சாடிய சுவேந்து ஆதிகாரி

 
சுவேந்து ஆதிகாரியிடம் பேசும் போலீஸ் அதிகாரி

மேற்கு வங்கத்தில் தனது கொடியை பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதை குறிப்பிட்டு, மாநிலத்தில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி வருவது குற்றமா? அவமானம் என்று மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி தாக்கினார்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி தனது தொகுதியான நந்திகிராமில் நடத்திய கொடி பேரணியை, அனுமதி வாங்கவில்லை என்று அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக சுவேந்து ஆதிகாரி டிவிட்டிரில் தொடர்ச்சியான டிவிட்களில், இன்று (நேற்று) நந்திகிராமில் கொடி பேரணியை முன்னெடுத்துச் செல்லும்போது, பொதுமக்கள் இந்திய தேசியக் கொடியுடன் கூடி என்னுடன் சேர்ந்து பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் எழுப்பியவாறு வந்தனர். அப்போது தேச விரோத மம்தா போலீசார் எங்கள் வழியை தடுத்தனர். இதை செய்ய எங்களுக்கு அனுமதி இல்லை என்று எங்களிடம் கூறினர். 

சுவேந்து ஆதிகாரி

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தங்கள் வீட்டில் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியின் தெளிவான அழைப்பை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வீடுகளில் கொடியேற்றுவதற்காக பிரச்சாரம் செய்கிறேன். பேரணியில் யாரும் எந்த அரசியல் கட்சியின் கொடியையும் ஏந்தியிருக்கவில்லை, இந்திய தேசியக் கொடியை மட்டுமே ஏந்தி இருந்தனர். மேற்கு வங்கத்தில் அவ்வாறு செய்வது குற்றமா?. 

தேசியக் கொடி

டி.ஜி.பி. மனோஜ் மாளவியாவின் உத்தரவை செயல்படுத்தும் மேதினிபூர்  எஸ்.பி. அமர்நாத் கே அறிவுறுத்தலின்பேரில் கூடுதல் எஸ்.பி. ஹல்டியா ஷ்ரத்தா என் பாண்டே இதை (பேரணி தடுத்து நிறுத்தம்) செய்தார். என்ன அவமானம், நாம் எங்கே வாழ்கிறோம்? இந்திய தேசியக் கொடியை ஏற்றி பிரச்சாரம் செய்வதற்கான ஊர்வலம்  தடைசெய்யப்பட்டுள்ளது. மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று மேற்கு வங்க நிர்வாகம் கருதுகிறதா? என பதிவு செய்துள்ளார்.