மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம்.. சுவேந்து உள்பட 5 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்..

 
சுவேந்து ஆதிகாரி

மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. சுவேந்து ஆதிகாரி உள்பட 5 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மறுஅறிவிப்பு வரும் வரை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி (பா.ஜ.க.) கோரிக்கை விடுத்ததையடுத்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து ஆதிகாரி உள்பட 5 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், பிர்பூம் வன்முறை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் வன்முறை மோதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டதை அடுத்து மறுஅறிவிப்பு வரும் வரை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து ஆதிகாரி இது தொடர்பாக கூறியதாவது: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மறுத்து விட்டது. எங்களது 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்களுடன் மோதுவதற்காக அவர்கள் கொல்கத்தா காவல்துறையினரை சிவில் உடையில் அழைத்து வந்தனர்.

பிர்பூம் வன்முறை சம்பவம்

விதிகளின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி, சபாநாயகருக்கு நான் புகார் எழுதுவேன். எங்களுக்கு மத்திய அரசின் தலையீடு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் பிரிபூமில் உள்ள ராம்பூர்ஹாட் பகுதியில் அண்மையில்  திரிணாமுல் காங்கிரஸின் பிரபலமான தலைவரான பாது ஷேக் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக ஒரு கும்பல்அந்த பகுதியில் வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் உள்பட 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.