பீகார் அமைச்சரவை விரிவாக்கம்.. தேஜஸ்வி யாதவுக்கும் நிதிஷ் குமார் துரோகம் செய்து விட்டார்.. சுஷில் குமார் மோடி

 
சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்…….. நிதிஷ் குமார் கருத்து…..

பீகார் அமைச்சரவை விரிவாக்கத்தில் மு்க்கிய துறைகளை தன் கட்சி வசம் வைத்துக் கொண்டு தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் நிதிஷ் குமார் துரோகம் செய்து விட்டார் என்று பா.ஜ.க. எம்.பி. சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜே.டி.யு) தலைவரும்,  முதல்வருமான நிதிஷ் குமார் அண்மையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதோடு முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பீகாரில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியின் ஆதரவுடன் நிதிஷ் குமார் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்தார்.  துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். 

தேஜஸ்வி யாதவ்

இந்நிலையில் நேற்று பாட்னாவில் உள்ள கவர்னர் மாளிகையில்  நேற்று  ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் உள்பட 31 பேர் பீகார் மாநிலத்தின் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அம்மாநில கவர்னர் பகு சௌஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் நிதிஷ் குமார் தன்வசம் உள்துறை, பொது நிர்வாகம், கேபினட் செயலகம், தேர்தல் மற்றும் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளை தன்வசம் வைத்துக்கொண்டார். தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரம், சாலை கட்டுமானம், நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் மேம்பாடு மற்றம் கிராமப்புற பணிகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டது.

சுஷில் குமார் மோடி

பீகார் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. சுஷில் குமார் மோடி கூறுகையில், சுரேந்திர யாதவ், ராமானந்த் யாதவ், லலித் யாதவ் போன்றோரை அமைச்சரவையில் வைத்து நிதிஷ் குமார் என்ன செய்தி கொடுக்க விரும்புகிறார்?. நிதிஷ் குமார் புத்திசாலித்தனமாக  ஐக்கிய ஜனதா தளத்திடம் உள்துறை மற்றும் நிதித்துறைகளை வைத்துக் கொண்டு தேஜஸ்வி யாதவுக்கும் துரோகம் செய்து விட்டார் என தெரிவித்தார்.