நிதிஷ் குமார் பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, மக்களின் ஆணை மற்றும் பிரதமர் மோடிக்கும் துரோகம் செய்தார்... சுஷில் குமார் மோடி

 
நிதிஷ் குமார்

நிதிஷ் குமார் பா.ஜ.க.வுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, மக்களின் ஆணை மற்றும் பிரதமர் மோடிக்கும் துரோகம்  செய்தார் என்று பீகாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டினார்.

பீகாரின் முன்னாள் துணை முதல்வரும், மாநிலங்களவை பா.ஜ.க. உறுப்பினருமான சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பிரதமநர் நரேந்திர மோடி ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மூத்த தலைவர்களும் எதிர்காலத்தில் நிதிஷ் குமார் அல்லது ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி இருக்காது என்பதை தெளிவாகக் கூறிவிட்டனர்.

சுஷில் குமார் மோடி

அந்த நபர் (நிதிஷ் குமார்) பா.ஜ.க.வுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, மக்களின் ஆணை மற்றும் பிரதமர் மோடிக்கும் துரோகம்  செய்தார். அதிகாரம் உள்ளவர்களுடன் கூட்டணி நடக்கும், ஆனால் நிதிஷ் குமார் இப்போது பொறுப்பாக மாறிவிட்டார். அவரது வாக்குகளை மாற்றும் திறன் முடிந்து விட்டது. கடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில்  அவருக்காக (நிதிஷ் குமார்) பிரதமர் மோடி  பிரச்சாரம் செய்ததால் 44 இடங்களை அவர்களால் (ஐக்கிய ஜனதா தளம்) கைப்பற்ற முடிந்தது. இல்லையெனில் அவர் 15 இடங்களை கூட வென்றிருக்க மாட்டார். 

பா.ஜ.க.

நிதிஷ் குமார் இப்போது சக்தியற்றவர். பா.ஜ.க.வில் இருந்தாலும் சரி, ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்தாலும் சரி அவரால் இனி வாக்குகளை ஈர்க்க முடியாது. அவர் கூட்டணியில் இருந்து விலகியதில் மகிழ்ச்சி அடைகிறோம். இனி வரும் 2025ல் நடக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் (பா.ஜ.க.) தனித்து போட்டியிட்டு ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அவர்  தெரிவித்தார். 2021 ஆகஸ்ட் மாதத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி மற்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தார்.