அமைச்சருக்கு எதிராக வாரண்ட்.. பீகாரை மீண்டும் லாலுவின் காலத்துக்கு கொண்டு செல்ல முயற்சியா?.. நிதிஷை தாக்கிய பா.ஜ.க.
நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டிய தினத்தில் சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற கார்த்திகேய சிங் பொறுப்பேற்றதை குறிப்பிட்டு, பீகாரை மீண்டும் லாலுவின் காலத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறாரா? என்று முதல்வர் நிதிஷ் குமாரிடம் பா.ஜ.க. எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரில் பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியின் ஆதரவுடன் நிதிஷ் குமார் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைத்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று நிதிஷ் குமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். இதில் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் கார்த்திகேய சிங் உள்பட மொத்தம் 31 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். கார்த்திகேய சிங் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
கார்த்திகேய சிங் கடத்தல் வழக்கில் டானாபூர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சரண் அடைய வேண்டும் ஆனால் அவர் அன்று நீதிமன்றத்துக்கு சென்று சரண் அடையாமல் பாட்னாவில் அமைச்சராக பதவியேற்றார். தற்போது இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் நிதிஷ் குமார் பதிலளிக்கையில், எனக்கு தெரியாது. இதைப்பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். அதேசமயம், கார்த்திகேய சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. வலியுறுத்தியு்ள்ளது.
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுஷில் குமார் மோடி இது தொடர்பாக கூறுகையில், கார்த்திகே சிங்குக்கு எதிராக வாரண்ட் இருந்திருந்தால், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் சட்ட அமைச்சராக பதவியேற்றுள்ளார். நான் நிதிஷிடம் கேட்கிறேன், பீகாரை லாலுவின் காலத்துக்கு கொண்டு செல்ல அவர் முயற்சிக்கிறாரா? கார்த்திகே சிங்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்? என தெரிவித்தார்.