காங்கிரஸ் கமிட்டி எந்த முடிவையும் எடுக்கலாம், ஆனால் நான் அதற்கு தலைவணங்க தயாராக இல்லை... சுனில் ஜாகர்

 
சுனில் ஜாகர்

காங்கிரஸின் ஒழுங்குமுறை கமிட்டி எந்த முடிவையும் எடுக்கலாம், ஆனால் அதற்கு தலைவணங்க தயாராக இல்லை என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை எஸ்.சி. தலைவராக குறிவைத்து பஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாகர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அம்மாநில காங்கிரஸார் சுனில் ஜாகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸின் தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனையடுத்து காங்கிரஸ் ஒழுங்குமுறை குழு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுனில் ஜாகருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் சுனில் ஜாகர் நேற்றுவரை எந்த அறிக்கையையும் குழு முன் சமர்ப்பிக்கவில்லை. 

காங்கிரஸ்

அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக சுனில் ஜாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஒழுங்குமுறை குழுவின் அணுகுமுறையால் நாம் மிகவும் கோபமாகவும், வருத்தமாகவும் இருக்கிறேன். நான் காங்கிரஸ் கட்சியின் அடிமை அல்ல, ஒழுக்கமான தொண்டன். காங்கிரஸ் கட்சியுடன் எனக்கு 50 ஆண்டுகால உறவு இருக்கிறது. பல ஆண்டுகளாக நான் காங்கிரஸ் கட்சியின் ஒழுக்கமான தொண்டனாக செயல்பட்டு வருகிறேன். 

பிரியங்கா, ராகுல்,சோனியா

புகார் பிரச்சினை குறித்து கட்சி என்னிடமிருந்து ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அல்லது வேறு எந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களும் என்னை அழைத்திருக்கலாம். ஒழுங்குமுறை குழுவில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களுடன் நான் நீண்ட உறவை கொண்டிருந்தாலும், மக்கள் பார்வையில் கட்சி தன்னை அவமானப்படுத்த முயற்சி செய்கிறது. கமிட்டி எந்த முடிவையும் எடுக்கலாம், ஆனால் அதற்கு தலைவணங்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.