இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வெற்றியுடன் கட்சியின் மறுமலர்ச்சி ஆரம்பமாகியுள்ளது... சுக்விந்தர் சிங் சுகு
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வெற்றியுடன் கட்சியின் மறுமலர்ச்சி ஆரம்பமாகியுள்ளது என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் இல்லாத நாடாக இந்தியா உருவாகும் என்று பா.ஜ.க. தலைவர்கள் அடிக்கடி கூறிவருவதற்கு, இந்த தேர்தல் மூலம் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இமாச்சல பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுக்விந்தர் சிங் சுகு கூறியதாவது: எந்த சித்தாந்தத்தையும் அவ்வளவு சீக்கிரம் முடிக்க (இல்லாமல் செய்வது) முடியாது.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வெற்றியுடன் கட்சியின் மறுமலர்ச்சி ஆரம்பமாகியுள்ளது. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் இருப்பது முக்கியம். அதை (எதிர்க்கட்சி) காங்கிரஸ் இல்லாமல் ஆக்க நினைத்தவர்கள் தாங்களாகவே இல்லாமல் மாறுகிறார்களா என்பதை காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் அதிகபட்சமாக 40 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் இது ஆட்சியமைக்க தேவையானதை காட்டிலும் 5 இடங்கள் அதிகமாகும்.