குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தால் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுகிறீர்கள் என்று அர்த்தம்.. மம்தாவை தாக்கிய பா.ஜ.க.

 
துர்கா பூஜை கிடையாது என அரசு சொன்னதாக நிரூபித்தால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன்.. மம்தா பானர்ஜி சவால்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்றால் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுகிறீர்கள் என்று அர்த்தம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அம்மாநில  பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் தாக்கினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆரம்பம் முதலே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். குஜராத்தில் உள்ள ஆனந்த் மற்றும் மெஹ்சானா மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், வங்க தேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதனை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்தார்.

குடியுரிமை திருத்த சட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன் இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் 2019க்கு நான் முற்றிலும் எதிரானவள். எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பா.ஜ.க. இந்த பிரச்சினையை எழுப்புகிறது என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறீர்கள் என்றால் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுகிறீர்கள் என்று அர்த்தம் என்று மம்தா பானர்ஜியை அம்மாநில  பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் குற்றம் சாட்டினார்.

சுகந்தா மஜூம்தார்

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி நாடு முழுவதும் அமல்படுத்தப்படுமா என்பது மத்திய அரசின் கையில் உள்ளது. நீங்கள் (முதல்வர் மம்தா பானர்ஜி) அதை எதிர்க்கிறீர்கள் என்றால் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுகிறீர்கள் என்று அர்த்தம். மேற்கு வங்கத்திலும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். மம்தா பானர்ஜி அதை விரும்பவில்லை என்றால், அகதிகள் குடிமக்களாக (இந்தியர்கள்) மாறுவதை அவர் விரும்பவில்லை என்று அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.