தட்டி தூக்கிய ஓபிஎஸ்! கையை பிசைந்து நிற்கும் இபிஎஸ்!

வழக்கம்போல் இந்த முறையும் நாம ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோமே என்று புலம்பி வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இந்த முறை நிம்மதி பெருமூச்சு. போராடி ஜெயித்திருக்கிறார் ஓபிஎஸ். 60 பேர் முட்டி மோதிக்கொண்டிருந்த நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தங்களின் தீவிர ஆதரவாளர்களுக்கு அந்த 2 சீட்டை கொடுத்துவிட்டார்கள்.
அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை சீட் இருப்பதால் அந்த இரண்டு சீட்டில் ஒன்று ஓபிஎஸ் ஆதரவாளருக்கு, ஒன்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளருக்கு என்று கணக்கு போட்டு இருந்திருக்கிறார்கள். இதனால்தான் மாநிலங்களவை தேர்தல் அறிவித்த நாளில் இருந்து இருவர் வீட்டிலும் ஆதரவாளர்கள் படையெடுத்துச் சென்றார்கள். ஆனால், இரண்டு சீட்டையும் தனது ஆதரவாளருக்குத்தான் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பத்தில் இருந்தே காய் நகர்த்தி வந்திருக்கிறார்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், கோகுல இந்திரா , செம்மலை, நடிகை விந்தியா உட்பட 60 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். இருப்பது இரண்டு சீட். இதில் 60 பேர் போட்டியா? என்ற கலக்கம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசித்து முடிவெடுக்க கூடினர்.
முன்னாடியே போட்டு வைத்த திட்டப்படி, அந்த ரெண்டு சீட்டையும் தனது ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமாருக்கு கொடுக்க இருக்கிறோம் என்று கூட்டத்தில் எடப்பாடி பேச, அதற்கு கோகுல இந்திராவும் , ஜேசிடி பிரபாகரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
மாஜிக்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? அப்படி மாஜிக்கள் ரெண்டு பேரை இப்போது நீங்கள் அறிவித்து விட்டாலும் அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரும் போது ராஜினாமா பண்ண வேண்டிய சூழ்நிலை வரும். எதுக்கு ரெண்டு வருஷத்தை வீணடிக்கிறீங்க? என்று பலர் கொதித்தெழுந்து இருக்கிறார்கள். அந்த ரெண்டு சீட்டை புதியவர்களுக்கு கொடுக்கலாமே என்று நியாயம் கேட்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலர், தென் மாவட்டங்களை பத்தி யோசிச்சு பார்க்கிறதே இல்லை. மேற்கும் வடக்கும் மட்டும் வளர்த்தால் போதுமா? தென்மாவட்டங்களில் கட்சி வளர வேண்டாமா? அங்கிருப்பவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாமா என்று ஆவேசப்பட்டிருக்கிறார்கள் .
இந்த களேபரத்தில், தனக்கு கிடைக்கும் என்று பெரிதும் நம்பி இருந்த கோகுல இந்திரா கடுப்பாகி கூட்டத்திலிருந்து வெளியேறி இருக்கிறார். தலைமை ஒரு முடிவு எடுக்க அதற்கு நாலாபுறமும் இருந்து எதிர்ப்புகள் இப்படி எழும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத இபிஎஸ் ரொம்பவே திணறிப் போய் இருக்கிறார். அதனால் கூட்டத்தில் எந்த முடிவையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை . ஆனால் திட்டமிட்டபடி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ரெண்டு பேருக்கும் தான் அந்த ரெண்டு சீட் என்பதில் இபிஎஸ் உறுதியாக இருந்திருக்கிறார்.
ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் வீட்டில் தான் அடிக்கடி ரெய்டு பாய்கிறது. அதிலிருந்து அவர்களை காக்க வேண்டும் என்றால் எம்.பி. பதவியை கொடுத்தே ஆக வேண்டிய சூழல் இருக்கிறது என்பதுதான் இபிஎஸ் தரப்பு வாதம். அந்த ரெண்டு பேரை பாதுகாப்பது முக்கியமா? கட்சியை வளர்ப்பது முக்கியமா? இது ஏன் தலைமைக்கு புரியமாட்டேங்குது? என்பது கட்சியினர் புலம்பல். இதற்கிடையில், வழக்கம்போல் இந்த முறையும் நாம ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோமே என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புலம்பல்.
60 பேரில் யாருக்கு சீட் என்று அதிமுக கூட்ட ஆலோசனையின்போது எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்த ஓபிஎஸ், தனது ஆதரவாளருக்கு ஒரு சீட் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அதிமுக முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மருக்குத்தான் அந்த ஒரு சீட் என்பதில் அவர் தெளிவாக இருந்திருக்கிறார்.
தனது தீவிர ஆதரவாளரான தர்மருக்கு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் ஓபிஎஸ். போராடி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அமைச்சர் பதவி உள்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்ததால் சி.வி.சண்முகம் கட்சியினருக்கும், மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர். ஆனால், தர்மர் யார்? அவருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? என்ற கேள்வி எழுந்தது. தர்மயுத்தம் காலத்திலிருந்தே ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக இருந்து வந்திருக்கிறார் தர்மர். அதனால்தான் அவருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் அந்த ஒரு சீட்டை.
ராஜ்யசபா தேர்தலில் போராடி வென்றிருக்கும் ஓபிஎஸ், அடுத்தடுத்த தேர்தல்களிலும் சம பலத்தில் இருப்பார் என்பதால் எடப்பாடி ரொம்பவே கையைப் பிசைந்து நிற்கிறார் என்கின்றனர் கட்சியினர்.