யானைப் பசிக்கு சோளப்பொறி போடுகிறார் ஸ்டாலின் - ஜெயக்குமார் கமெண்ட்
யானை பசிக்கு சோளப்பொறி போடுகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது புதுமைப்பெண் திட்டம் குறித்து அவர் விமர்சித்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தாலிக்கு தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் 7 ஆயிரம் கோடி மதிப்பில் ஏழு டன் தங்கம் 4 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு பயனடைந்துள்ளார்கள் . தற்போது அதை புதுமைப்பெண் திட்டம் என்று மாற்றம் செய்து தாலிக்கு தங்கம் வழங்குவதற்கு பதிலாக கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் யானை பசிக்கு சோளப்பொறி போல உள்ளது என்றார்.
அவர் மேலும், திராவிட மாடல் என்ற போர்வையில் திராவிடம் என்கிற அருமையான பெயரை திமுகவினர் குட்டிச்சுவராக்கி வருகிறார்கள். எல்லா வகையிலுமே மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டு திராவிட ஆட்சி என்று சொல்கிறார்கள் . இந்த ஆட்சியிலேயே மோசமான துறை பள்ளி கல்வித் துறை தான். பள்ளி கல்வித்துறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயில் மார்க் வாங்கி இருக்கிறார் என்றார்.
உதயநிதி ஸ்டாலினுடைய ரசிகர் மன்றங்களே கவனித்துக் கொள்வது தான் அன்பில் மகேஷுக்கு ஏற்ற துறையாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கடுமையாக சாடினார்.