ஸ்டாலின்.. பேச மறுத்த மு.க. அழகிரி
எந்த கேள்வி கேட்டாலும் நறுக்கு தெறித்தார் போல் பதில் சொல்வது மு.க. அழகிரியின் வழக்கம் . ஆனால் இன்றைக்கு அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவே இல்லை
கருணாநிதி திமுகவின் தலைவராக இருந்தபோது முக அழகிரி மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவரை திமுகவில் இருந்து நீக்கினார். அதிலிருந்து திமுகவிற்கும் அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கூட மு.க. அழகிரி தனிக்கட்சி ஆரம்பித்து மு. க. ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற ரீதியில் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று தனிக்கட்சி ஆரம்பிப்பதையும் பிற கட்சிக்காக பிரச்சாரம் செய்வதையும் நிறுத்திக் கொண்டு அமைதியானார் அழகிரி.
தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு .க. ஸ்டாலின் முதல்வரானதும் பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்பார் என்று பேசப்பட்டது . ஆனால் பதவியேற்பு விழாவுக்கு அவர் வரவில்லை. அடுத்தடுத்து நிகழ்ந்த உறவுகளின் நிகழ்வுகளில் கூட அழகிரி -ஸ்டாலின் எனும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக் கொள்ளவில்லை.
அண்மையில் அழகிரிக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்த போது அது குறித்து விசாரிப்பதற்காக ஸ்டாலின் மதுரை செல்லும் போது சந்தித்து நலம் விசாரிப்பார் என்ற பேச்சை எழுந்தது.
இந்த நிலையில் மு. க .அழகிரி தனது ஆதரவாளர் இசக்கி முத்துவை நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவுக்கு பண உதவிகள் வழங்கினார். கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவரும், முக அழகிரியின் தீவிர ஆதரவாளரவமான இசக்கி முத்து விபத்தில் சிக்கி உடல்நல குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற அழகிரி, இசக்கிமுத்துவை சந்தித்து நலம் விசாரித்து விட்டு மருத்துவ செலவுக்கு பண உதவிகள் அளித்தார். அதன் பின்னர் வெளியே வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள் சுற்றி வளைத்தனர். மீண்டும் மத்திய அமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளனவா? திமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா? உதயநிதியும் துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கின்றீர்கள்? முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நிகழ வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார் அழகிரி.