இதற்காக திருமாவை எம்பி பதவியிலிருந்து சபாநாயகர் ஓம் பிர்லா தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

 
ti

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன்  நினைவு நாளான இன்று விசிக தலைமையகம் அம்பேத்கர் திடலில்  அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்தினோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கங்களில் படத்தினை பகிர்ந்துள்ளார்.  இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

t

  இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள  பயங்கரவாத இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய சதி செய்ததோடு, படுகொலையினை திட்டமிட்டு கொடுத்ததும் அந்த இயக்கத்தின் தலைவர் பிராபகரன் என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது வெளியில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதும்,  படுகொலையை அரங்கேற்றிய நபரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தேச துரோகம் மட்டுமல்ல, இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவால் என்கிறார் தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

v

அவர் மேலும்,   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தின் படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட  திருமாவளவன், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுள்ள காரணத்திற்காக மக்களைவை உறுப்பினர் பதவியிலிருந்து சபாநாயகர் ஓம் பிர்லா தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினருக்கு வீர வணக்கம் செலுத்தி, முன்னாள் பிரதமரை படுகொலை செய்ய சதி செய்து திட்டமிட்ட ஒருவரை போற்றி கொண்டாடும் தொல்.திருமாவளவனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை  தமிழக அரசும், தமிழக காவல்துறையம் நடவடிக்கை எடுக்குமா?என்று கேட்டிருக்கிறார்.