எஸ். பி. வேலுமணி கைதாகிறார்? உடந்தையாக இருந்த அதிகாரிகளும் கைதாகிறார்கள்?

 
sp

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவுகிறது. ஊழலில் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்திலிருந்து தகவல் பரவுகிறது.   எஸ். பி. வேலுமணி,  அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசின் அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் எழுதி இருக்கிறது என்றும்,  ஆதாரங்கள் இருப்பதால் எஸ். பி. வேலுமணி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கலாம் என்றும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் பரவுகிறது.  அனுமதி கிடைத்ததும் விசாரணை நடத்தி கைது செய்ய இருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை  என்று தகவல்.

cc

 கடந்த அதிமுக ஆட்சியில்  அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.  சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 816 கோடி ரூபாய் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்ற புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எஸ். பி. வேலுமணி மீது வழக்கு தொடர்ந்தார்கள்.    சாலை அமைக்கும் பணி வேலுணிக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்டதாகவும் இதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது .  

2017- 18 ஆம் ஆண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமித்ததிலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.   இதன் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வேலுமணியின் வீடு அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.  அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.   அவற்றை ஆய்வு செய்தபோது டெண்டர் முறைகேட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது .

சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ்,  துணை கமிஷனர்களான கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி மற்றும்  கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த கார்த்திகேயன் , சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார்,  முதன்மை பொறியாளராக இருந்த புகழேந்தி,  தலைமை பொறியாளராக இருந்த செந்தில்நாதன் ஆகியோர் முறைகேட்டுக்கு உதவியதாக புகார் எழுந்திருக்கிறது .

ko

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய விசாரணையில் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  ஆகவே இந்த வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2021ம் ஆண்டு  நவம்பரில் உத்தரவிட்டது. 

 இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடிதம் எழுதி இருக்கின்றனர்.  போதிய ஆதாரங்கள் இருப்பதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு  செய்ய அனுமதி அளிக்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது என்றும்,  அரசு அனுமதி அளித்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைப்பார்கள் என்றும் விசாரணைக்குப் பின்னர் வேலுமணிக்கு உதவியது உறுதியானால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தயாராக இருக்கின்றனர் என்றும், அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியும் கைது செய்யப்படுவார்  என்றும் தகவல் தெரிவிக்கிறது  லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரம்.